நோன்பு உணவுக்காக வீட்டின் வெளியே காத்திருந்த இஸ்லாமியர் சுட்டுக்கொலை - பரபரப்பு வீடியோ
- சாஹூர் (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துக்கொண்டு நின்றார்.
- கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் அதிகாலையில் வீட்டு வசாலில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அலிகரின் ரோராவரில் உள்ள தெலிபாடாவில் வசிப்பவர் ஹரிஸ் என்ற கட்டா (25 வயது). வெள்ளிக்கிழமை இரவு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு வந்த கட்டா அதிகாலை 3.15 மணியளவில் தனது வீட்டின் அருகே சேஹ்ரி (சஹுர்) (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துகொண்டு நின்றார். மற்றொரு நபர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த கட்டாவை நோக்கி இரண்டு பைக்குகளில் வந்த நால்வர் வந்தனர்.
அவர்களில் ஒருவன் கட்டா மீது துப்பாக்கிசூடு நடத்தினான். இதில் கட்டா சரிந்து கீழே விழுந்தார். கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார். தொடர்ந்து, பைக்கில் இருந்து இறங்கிய மற்றொருவன் கட்டா இறந்துவிட்டதை உறுதி செய்ய மேலும் பல முறை அவரை நோக்கி சுட்டான். பின் நால்வரும் பைக்கில் ஏறி தப்பினர். அவர்களை மற்றொரு நபர் துரத்திக்கொண்டு ஓடினார்.
இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.