இந்தியா

வரும் 2028-ல் இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்: மோர்கன் ஸ்டான்லி

Published On 2025-03-15 01:31 IST   |   Update On 2025-03-15 01:31:00 IST
  • வரும் 2028ல் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 5.7 டிரில்லியன் டாலராக உயரும்.
  • அதன்மூலம் உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும்.

புதுடெல்லி:

உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா 2-வது இடத்திலும் இருக்கிறது. ஜப்பான் 3-வது இடத்திலும், ஜெர்மனி 4-வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியா தற்போது 5-வது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிதிச்சேவை நிறுவனம் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம். இந்த நிறுவனம் சமீபத்தில் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 2023-ம் ஆண்டில் 3.5 டிரில்லியன் டாலர்கள் பொருளாதார மதிப்புடன் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியது.

வரும் 2026-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 4.7 டிரில்லியன் டாலர்களாக உயரும். அப்போது அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்து 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.

வரும் 2028ம் ஆண்டிற்குள் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி 5.7 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடன் 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்.

கடந்த 1990-ம் ஆண்டில் உலகின் 12-வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, 2000-ம் ஆண்டில் 13-வது இடத்துக்கு பின்தங்கியது. 2020-ல் 9-வது இடத்துக்கும், 2023ல் 5-வது இடத்துக்கும் முன்னேறியது.

உலகின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 3.5 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக அதிகரிக்கும்.

வலுவான மக்கள்தொகை வளர்ச்சி, துல்லியமான ஜனநாயகம், பெரும் பொருளாதார ஸ்திரத்தன்மையால் வரும் ஆண்டுகளில் உலகளாவிய உற்பத்தியில் இந்தியாவின் பங்கு உயரும்.

உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும், 2025-ம் ஆண்டில் இந்திய பங்குகள் விலைகள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News