மகாராஷ்டிராவில் பயணிகள் ரெயில் மீது சரக்கு லாரி மோதி விபத்து..
- மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து அமராவதி நோக்கி மும்பை-அமராவதி எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்தது.
- ரெயிலின் வேகம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மகாராஷ்டிராவின் மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து அமராவதி நோக்கி மும்பை-அமராவதி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை பயணித்துக்கொண்டிருந்தது.
ஜல்கான் மாவட்டத்தில் உள்ள போட்வாட் ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் ரெயில் வந்துகொண்டிருந்தபோது கோதுமை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றது.
அப்போது ரெயில் லாரி மீது மோதி சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு அதை இழுத்துச் சென்றது. இதில் லாரி இரண்டாக உடைந்தது. ரெயிலின் வேகம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்துக்குப் பிறகு லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை காவல்துறையினரும் ரெயில்வே நிர்வாகமும் தேடி வருகின்றனர்.
லாரி ரெயில்வே தடுப்பை உடைத்து சட்டவிரோதமாக ரெயில் பாதையில் வந்தது தெரியவந்தது. இந்த திடீர் விபத்தால் ரெயிலில் பயணித்த பயணிகள் பீதியடைந்தனர். மேலும் இந்த விபத்தால் சில மணி நேரங்களாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. தாண்டவத்தை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.