இன்ஸ்டா நண்பனை நம்பி இந்தியா வந்த இங்கிலாந்து பெண்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரம்
- இதை ஏற்று அந்த பெண் டெல்லிக்கு வந்து மஹிபால்பூர் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
- வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரிட்டிஷ் உயர் கமிஷனிடம் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண் இன்ஸ்டாகிராம் நண்பனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த பெண் கைலாஷ் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். இதற்கிடையே மகாராஷ்டிரா மற்றும் கோவாவுக்கு சமீபத்தில் சுற்றுலா வந்துள்ளார்.
தனது இன்ஸ்டா நண்பன் கைலாஷையும் தன்னுடன் அந்த பெண் அழைத்துள்ளார். ஆனால் கைலாஷ் தான் டெல்லியில் உள்ளதாகவும், அங்கு வருமாறும் பெண்ணனிடம் தெரிவித்துள்ளார்.
இதை ஏற்று அந்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு வந்து மஹிபால்பூர் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் மாலையில் தனது அறைக்கு கைலாஷை அப்பெண் அழைத்துள்ளார்.
தனது நண்பன் வாசிம் உடன் வந்த கைலாஷ் ஹோட்டல் அறையில் வைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க ஹோட்டல் லிப்டில் சென்றபோது அங்கு வேலைபார்த்த ஊழியர் ஒருவரும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து வெளியேறி அந்த பெண் வசந்த் குஞ்ச் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரிட்டிஷ் உயர் கமிஷனிடம் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர். கைலாஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தாக தெரிகிறது. அவனையும் தொடர்புடையவர்களையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
தன்னைச் சந்திக்க இந்தியாவுக்கு வருமாறு பெண்ணை அடிக்கடி கைலாஷ் வற்புறுத்தியது தெரியவந்தது. பெண்ணுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.