நயவஞ்சக பாஜக.. நாட்டுக்கே ஆர்எஸ்எஸ் விஷம் - மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் கருத்துக்கு கடும் எதிர்ப்பு
- தற்போது மற்றொரு மிகவும் ஆபத்தான மற்றும் நயவஞ்சக எதிரி கேரளாவிற்குள் நுழைந்துள்ளார்.
- அவரது காரை மறித்து போராட்டம் நடத்தியதாக ஐந்து ஆர்எஸ்எஸ்-பாஜக பிரமுகர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் நெய்யாற்றிங்கரை பகுதியில் மறைந்த காந்தியவாதி பி. கோபிநாதன் நாயரின் சிலை திறப்பு விழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் இடது ஜனநாயக முன்னணி (LDF) ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள். ஆனால் தற்போது மற்றொரு மிகவும் ஆபத்தான மற்றும் நயவஞ்சக எதிரி கேரளாவிற்குள் நுழைந்துள்ளார்.
அதுதான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் பாஜகவை தோற்கடிக்க முடியும், ஆனால் ஆர்எஸ்எஸ் விஷம். இது குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இது நம் நாட்டின் கட்டமைப்பில் பரவினால், அனைத்தையும் அழித்துவிடும் என்று பேசினார். இந்த உரைக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
துஷார் காந்தி தனது கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அவரது காரை மறித்து போராட்டம் நடத்தியதாக ஐந்து ஆர்எஸ்எஸ்-பாஜக பிரமுகர்கள் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் நெய்யாட்டின்கரா நகராட்சி கவுன்சிலர் மகேசன் நாயரும் அடங்குவார்.
இந்நிலையில் துஷார் காந்திக்கு எதிரான செயல்களை கேரள முதல்வர் பினராயி விஜயன், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதல் என்று கண்டித்துள்ளார்.
காங்கிரசும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து நேற்று ஊடகங்களிடம் பேசிய துஷார் காந்தி, கேரளாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை. வகுப்புவாதத்துக்கு எதிரான தனது போராட்டத்தையும் கருத்தையும் திரும்பப்பெறப்போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.