VIDEO: மாணவர்கள் முன் தோப்புக்கரணம் போட்டு விழுந்து வணங்கிய தலைமையாசிரியர்.. உருக்கமாக பேச்சு!
- கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு உதவியாற்ற மனிதனைப் போல் நான் உங்கள் முன் நிற்கிறேன்.
- நீங்கள் ஒழுக்கத்தை மீறினால் நாங்கள் இனி உங்களை தண்டிக்க மாட்டோம், நாங்களே தண்டனை கொடுத்துக் கொள்வோம். தற்போது இந்தப் பள்ளியில் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது.
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் , பொப்பளி, பெண்டா கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக சிந்தா ரமணா குஞ்சிலு வேலை செய்து வருகிறார். இவர் மாணவர்களிடையே நல்ல ஒழுக்கம் மற்றும் கல்வியை வழங்குவதற்காக பெரும்பாடு பட்டு வருகிறார்.
இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்கு வருவதில்லை. இதனால் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி தவறான பாதையில் செல்வதாக உணர்ந்தார்.
மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர ஆசிரியர்களை அவர்களது வீட்டிற்கு அனுப்பி ஊக்குப்படுத்தினார். ஆனாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை.
மாணவர்களின் பெற்றோர்களுக்கு நல்ல போதனை கூறும் வீடியோக்களை அனுப்பி அவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
அவரின் முயற்சிகள் அனைத்தும் வீணாகி போனதால் விரக்தி அடைந்தார்.
இந்த நிலையில் தலைமையாசிரியர் சிந்தா ரமணா குஞ்சிலு, நேற்று காலை மாணவர்களை பள்ளி வளாகத்திற்கு வரவழைத்தார்.
அவர்கள் முன்பு தலைமை ஆசிரியர் சிந்தா ரமணா குஞ்சுலு தோப்புக்கரணம் போட்டார். தரையில் படுத்து கைகளை கூப்பி வணங்கினர். அப்போது மாணவர்கள் இனி தவறு செய்ய மாட்டோம் ஐயா என பலமுறை கூறினர்.
மாணவர்கள் தவறு செய்தாலும் நாங்கள் கண்டிக்க முடியாது. எதுவும் செய்ய முடியாது. கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு உதவியாற்ற மனிதனைப் போல் நான் உங்கள் முன் நிற்கிறேன்.
நீங்கள் ஒழுக்கத்தை மீறினால் நாங்கள் இனி உங்களை தண்டிக்க மாட்டோம், நாங்களே தண்டனை கொடுத்துக் கொள்வோம்.
மாணவர்களிடையே கல்வி வராமல் போகலாம் ஆனால் பணிவு வரவேண்டும். குழந்தைகளுக்கு குறைந்தபட்ச கல்வி மற்றும் திறனை வளர்க்க நாங்கள் எங்களது பங்களிப்பை செய்து வருகிறோம்.
சரியான பாதையில் வழி நடத்தி மாணவர்களை கல்வியை வழங்குவது என்னுடைய பொறுப்பு. கல்வி அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஆனால் நல்ல நடத்தை அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் இதன் காரணமாக சமூகம் அமைதியாக இருக்கும்.
தற்போது இந்தப் பள்ளியில் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. இது எனது மனதை வேதனைப்படுத்துகிறது என தெரிவித்தார்.
தலைமையாசிரியர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பேசும் பொருளாக மாறியது.