ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கட்டிய ரூ.500 கோடி அரண்மனையின் வியக்க வைக்கும் வீடியோ
- அழகிய ருஷிகொண்டா மலையின் கிட்டத்தட்ட பாதி பகுதி இந்த அரண்மனையை கட்டுவதற்காக அழிக்கப்பட்டுள்ளன.
- கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை கடுமையாக மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆந்திர மாநிலம் ரிஷி கொண்டா மலையில் முன்னாள் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி ரூ.500 கோடி அரசு செலவில் பிரம்மாண்டமான அரண்மனை ஒன்றை கட்டினார். இது முதல் மந்திரியின் முகாம் அலுவலகம் என கூறப்பட்டது.
இந்த கட்டிடத்தில் விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இது ஆந்திர மாநிலத்தின் ஷீஷ் மஹால் அரண்மனை என அழைக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
பிரமாண்டமான வளாகத்தின் உள்ளே தங்க முலாம் பூசப்பட்ட அலங்காரங்கள், இத்தாலிய பளிங்கு தரை மற்றும் பட்டுப் போன்ற அலங்காரங்கள் உட்பட ஆடம்பரமான உட்புறங்களை கொண்டுள்ளது.
இந்த அரண்மனை ஒரு முக்கிய கடலோர சுற்றுலா மையமான அழகிய ருஷிகொண்டா பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் நன்கு பரந்த தொகுதிகளைக் கொண்டுள்ளது.
விரிவான உள்கட்டமைப்பு நடைபாதை சாலைகள், வடிகால் அமைப்புகள், 100 கே.வி. மின் துணை மின்நிலையம் ஆகியவை என வியக்கும் வைக்கும் வகையில் அபரிதமான செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
ஜெகன்மோகன் ரெட்டி கட்டிய ஷீஷ்மஹால் அரண்மனையின் பிரம்மாண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஆடம்பரமான கட்டுமானம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை கடுமையாக மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அழகிய ருஷிகொண்டா மலையின் கிட்டத்தட்ட பாதி பகுதி இந்த அரண்மனையை கட்டுவதற்காக அழிக்கப்பட்டுள்ளன. இது கடுமையான சுற்றுச்சூழல் கவலைகளை எழுப்புவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில்:-
முன்னாள் முதல் மந்திரி நீதிமன்றங்களை ஏமாற்றி சுற்றுச்சூழல்களை மீறி பிரம்மாண்ட மாக ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்காக பொதுப் பணத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்.
அரசியலில் இது போன்ற தலைவர்கள் இருப்பது உண்மையிலேயே நமக்கு தேவையா. இது போன்ற விவாகரத்தில் நீண்ட விவாதம் தேவை.
தற்போது இந்த கட்டிடங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அவற்றிலிருந்து அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டுவது என்பதற்கு நாங்கள் எந்த விதமான ஆலோசனையும் செய்யவில்லை.
இந்த கட்டமைப்புகள் சுற்றுலாத் துறைக்கு சாத்தியமானது அல்ல. இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
டெல்லியில் முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவருடைய பங்களாவை ஆடம்பரமாக ரூ.36 கோடி செலவில் புதுப்பித்தார்.
அதேபோல் ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஜெகன்மோகன் ரெட்டியும் ஷீஷ் மஹால் அரண்மனையை கட்டி உள்ளார் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஷீஷ் மஹால் அரண்மனை விவகாரம் ஆந்திர அரசியலில் தற்போது புதிய புயலை கிளப்பி உள்ளது. * * * ஷீஷ் மஹால் அரண்மனையின் பிரமாண்ட தோற்றம்.