ஊழல் முதல்வர் சித்தராமையாவின் ஹலால் பட்ஜெட்: அதன் உச்சத்தில் திருப்திப்படுத்தல்- பாஜக விமர்சனம்
- பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை சமூகத்தினரிடையே எளிய திருமணங்களை ஊக்குவிக்க ரூ. 50 ஆயிரம்.
- பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அதிக மாணவ-மாணவிகள் கொண்ட உருது வழி பள்ளிகள் மேம்படுத்தப்படும்.
கர்நாடக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் சிறுபான்மை பெண்களுக்காக 2024-25 ஆம் ஆண்டில் காலியாக உள்ள வக்ஃப் நிலத்தில் 15 மகளிர் கல்லூரிகளையும், 2025-26 ஆம் ஆண்டில் மேலும் 16 கல்லூரிகளையும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை சமூகத்தினரிடையே எளிய திருமணங்களை ஊக்குவிக்க, மிகப்பெரிய அளவில் திருமண விழாவிற்கு ஏற்பாடு செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஒரு ஜோடிக்கு 50 ஆயிரம் ரூபாய் அளவில் வழங்கப்படும்.
எல்.கே.ஜி, யு.கே.ஜி முதல் பியு (PU) வரை 250 மௌலானா ஆசாத மாதரி ஆங்கில வழி பள்ளிக்கூடங்கள் படிப்படியாக 500 கோடி ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் இதற்காக 100 கோடி ரூபாய் வழங்கப்படும். பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அதிக மாணவ-மாணவிகள் கொண்ட உருது வழி பள்ளிகள் மேம்படுத்தப்படும். முக்கியமான வசதிகள் வழங்குவதற்கான 400 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்துள்ளது. இந்த வருடம் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் சிறுபான்மையினர் காலனி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மதிப்பிலான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 2025-26 நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.
கர்நாடக சிறுபான்மை மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மை இளைஞர்கள் ஸ்டார்ட்-அப்ஸ் தொடங்க ஊக்குவிக்கப்படுவார்கள்.
வக்ஃப் சொத்துக்களை பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல், முஸ்லிம்கள் அடக்கம் செய்யும் இடங்கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் இயக்குநரகத்தால் நடத்தப்படும் 169 உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 25,000 மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றது.
சிறுபான்மையினரை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதவில் "கர்நாடகாவில் ஊழல் முதல்வர் சித்தராமையா ஒரு ஹலால் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் உச்சத்தில் திருப்திப்படுத்தல்!" எனக் குறிப்பிட்டுள்ளது.