இந்தியா

சாலை விபத்துகளில் பலியாகும் 2 லட்சம் உயிர்கள் - சிவில் இன்ஜினியர்கள் தான் குற்றவாளிகள் : நிதின் கட்கரி

Published On 2025-03-07 16:01 IST   |   Update On 2025-03-07 16:01:00 IST
  • இந்த இறப்புகளில், 66.4% பேர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள்
  • எனது 10 வருட அனுபவத்திற்குப் பிறகு நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.

இந்தியாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளுக்கு சிவில் இன்ஜினியர்கள், ஆலோசகர்கள் மற்றும் அவர்கள் தயாரிக்கும் குறைபாடுள்ள 'விரிவான திட்ட அறிக்கைகள்' (DPR) தான் காரணம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குளோபல் ரோடு இன்ஃப்ராடெக் உச்சி மாநாடு & எக்ஸ்போவில் (GRIS) நிதின் கட்கரி கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், 'இந்தியாவில் சாலை விபத்துகள் தொடர்பான பல கடுமையான பிரச்சினைகளை நாம் எதிர்கொள்வது நல்லதல்ல.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்து 80 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன, 1 லட்சத்து 80 ஆயிரம் இறப்புகள் நிகழ்கின்றன. இது உலகிலேயே மிக அதிகமாக இருக்கலாம். இந்த இறப்புகளில், 66.4% பேர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இழப்பை ஏற்படுத்துகிறது.

 

இதன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீத இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் மிக முக்கியமாகத் திறமையான இளைஞர்களின் இழப்பு நமது நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும். இந்த விபத்துகள் அனைத்திற்கும் மிக முக்கியமான குற்றவாளிகள் சிவில் இன்ஜீனியர்கள்.

நான் எல்லோரையும் குறை சொல்லவில்லை. ஆனால் எனது 10 வருட அனுபவத்திற்குப் பிறகு நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். கட்டுமானத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) உருவாக்குபவர்களே, அதில் ஆயிரக்கணக்கான தவறுகள் செய்கின்றனர்.

இந்த அறிக்கைகளை வெளியிட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். சிறிய சிவில் தவறுகளும் மோசமான சாலை வடிவமைப்புகளும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தாலும், யாரும் பொறுப்பேற்பதில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.  

Tags:    

Similar News