பாராளுமன்றம் நாளை கூடுகிறது: பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
- வரி குறைப்பு தொடர்பாக காங்கிரஸ் பாராளுமன்றத்தில் பிரச்சனையை கிளப்பும்.
- தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.
புதுடெல்லி:
2025-26-ம் நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இரு அவை உறுப்பினர்களும் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
மறுநாள் பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
கடந்த மாதம் 13-ந் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்றது. கடைசி நாளில் எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வக்பு திருத்த மசோதா குறித்த ஜே.பி.சி. (பாராளு மன்ற கூட்டுக் குழு, அறிக்கை) தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வுக்காக பாராளுமன்றம் நாளை (10-ந்தேதி) கூடுகிறது. ஏப்ரல் 4-ந் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத் தொடரில் கிளப்பும். இதனால் பாராளுமன்ற கூட்டத்தொடர் அனல் பறக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தொகுதி மறு சீரமைப்பு மற்றும் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும்.
தி.மு.க. எம்.பி.க்கள் தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு, தமிழகத்துக்காக நிதிப்பகிர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கிளப்பும்.
அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அமெரிக்க பொருட்கள் மீதுதான வரியை குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்த வரி குறைப்பு தொடர்பாக காங்கிரஸ் பாராளுமன்றத்தில் பிரச்சனையை கிளப்பும்.
இதுகுறித்து பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தும். பல வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை எண்கள் இருப்பது குறித்த பிரச்சினையை திரிணாமுல் காங்கிரஸ் எழுப்ப உள்ளது.
வக்பு திருத்த மசோதாவை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றம் நாளை கூடுவதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எழுப்ப உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.