பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து பத்திரிகையாளர் சுட்டுக் கொலை.. உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு
- மஹோலி தாலுகாவில் அரசு நெல் கொள்முதல் மற்றும் நில பேரங்களில் நடந்த முறைகேடுகள் குறித்துசெய்தி வெளியிட்டார்.
- கடந்த பத்து நாட்களாக ராகவேந்திராவுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பத்திரிகையாளர் ராகவேந்திர பாஜ்பாய் (35) ஒரு முன்னணி இந்தி நாளிதழில் பிராந்திய நிருபராகப் பணியாற்றி வந்தார். நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் சீதாபூர் மாவட்டத்தின் இமாலியா சுல்தான்பூர் பகுதியில் சீதாபூர் - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் அந்த பத்திரிகையாளர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தினர்.
மர்ம நபர்கள் சுட்டதில் மூன்று தோட்டாக்கள் அவரது தோள்பட்டை மற்றும் மார்பில் பாய்ந்தன. உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர்.
உள்ளூர் மக்களின் உதவியுடன், காவல்துறையினர் பத்திரிகையாளரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சமீபத்தில் மஹோலி தாலுகாவில் அரசு நெல் கொள்முதல் மற்றும் நில பேரங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து ராகவேந்திர பாஜ்பாய் செய்தி வெளியிட்ட நிலையில் 4 அரசு அதிகாரிகள் (லெக்பால்) இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கடந்த பத்து நாட்களாக ராகவேந்திராவுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாகவும், மிரட்டல் வந்த செல்போன் கால்களை டிரேஸ் செய்து வருவதாகவும் சீதாபூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) பிரவீன் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக காட்சியின்கீழ் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் சமாஜ்வாடி கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.