பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் சிறையில் இருந்து விடுவிப்பு.. தொடரும் விசாரணை
- நாட்டில் அவசர நிலையை அறிவித்து ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக திடீரென அறிவித்தார்.
- யூனை- ஐ பதவிநீக்கம் செய்ய பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தீர்மானம் கொண்டு வந்தது.
ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் நேற்று (சனிக்கிழமை) சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை, தென் கொரிய நீதிமன்றம் யூனின் கைது நடவடிக்கையை ரத்து செய்து, அவரை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த அவரை அவரது ஆதரவாளர்கள், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் தேசியக் கொடிகளை அசைத்து வரவேற்றனர்.
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி இரவு, பாராளுமன்ற கூட்டத்திற்கு பின்னர் நாட்டில் அவசர நிலையை அறிவித்து ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக திடீரென அறிவித்தார்.
தொடர்ந்து அடுத்த நாளே அந்த அறிவிப்பை திரும்பப்பெற்றார். தனிச்சையாக செயல்பட்ட யூனை- ஐ பதவிநீக்கம் செய்ய பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தீர்மானம் கொண்டு வந்தது.
இதன் விளைவாக அவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். யூனின் ஜனாதிபதி பதவியை முறையாக முடிவுக்குக் கொண்டுவருவதா அல்லது அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதா என்பதை அரசியலமைப்பு நீதிமன்றம் முடிவு செய்யும்.
அரசியலமைப்பு நீதிமன்றம் யூனின் பதவி நீக்கத்தை உறுதி செய்தால், அவர் அதிகாரப்பூர்வமாகப் பதவியில் இருந்து நீக்கப்படுவார். மேலும் இரண்டு மாதங்களுக்குள் தேசியத் தேர்தல் நடத்தப்படும்.
இதற்கிடையே கைது செய்யப்பட்டு தற்போது யூன் விடுதலை ஆகியுள்ள நிலையில் அவர் மீதான விசாரணையை தடங்கல் இன்றி தொடரலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.