பிரிட்டனின் அலட்சியம்.. ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்
- போராட்டக்காரர்களில் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி ஜெய்சங்கரின் காரை நிறுத்த முயன்றார்
- பிரிட்டனின் அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.
பிரிட்டனில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேட்டியளித்துள்ளார்.
லண்டனில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கார் முன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த புதன்கிழமை போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களில் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி ஜெய்சங்கரின் காரை நிறுத்த முயன்றார். அதைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஜெய்ஸ்வால், இது காலிஸ்தானியர்களின் அச்சுறுத்தல்கள், மிரட்டல் சம்பவங்கள். இது நமது சட்டப்பூர்வமான இராஜதந்திர நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் நடப்பவை மீதான பிரிட்டனின் அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்த குழுக்கள் பிரிட்டனில் அச்சுறுத்தல் விடுக்கவும் பிற செயல்களைச் செய்யவும் உரிமம் பெற்றிருப்பது போல் தெரிகிறது. அவர்கள் எங்கள் இராஜதந்திரப் பணிகளைத் தடுக்க முயல்கிறார்கள்.
இந்த சம்பவங்களில் குற்றவாளிகள் மீது இங்கிலாந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இங்கிலாந்து வருகையின் போது சாத்தம் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.
அமைதியான போராட்டத்திற்கான உரிமையை இங்கிலாந்து ஆதரிக்கிறது. ஆனால் பொது நிகழ்வுகளை மிரட்டும், அச்சுறுத்தும் அல்லது சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே மொரிஷியஸின் தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி, மார்ச் 11-12 தேதிகளில் மொரிஷியஸுக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.