இந்தியா

இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் தாய் பிணத்துடன் 9 நாட்கள் வசித்த மகள்கள்

Published On 2025-02-01 14:45 IST   |   Update On 2025-02-01 14:45:00 IST
  • வீட்டை காலி செய்து விட்டு 2 மகள்களுடன் எங்கே செல்வது என மனவேதனை அடைந்தார்.
  • தாயின் இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டனர்.

தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத், புத்த நகரை சேர்ந்தவர் லலிதா (வயது 45). இவருடைய கணவர் ராஜு. உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு ரவலிகா (24), யஷ்விகா (22) என 2 மகள்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக லலிதாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் லலிதா தனது தாயின் வீட்டில் மகள்களுடன் வசித்து வந்தார்.

லலிதாவின் தாய் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தனக்கு துணையாக இருந்த தாய் இறந்து விட்டதால் லலிதா விரக்தி அடைந்தார்.

இந்த நிலையில் 3 மாதங்களாக வீட்டு வாடகை கட்டாததால் வீட்டில் உரிமையாளர் வீட்டை காலி செய்ய வேண்டும் என கடந்த மாதம் 21-ந் தேதி தெரிவித்தார்.

வீட்டை காலி செய்து விட்டு 2 மகள்களுடன் எங்கே செல்வது என மனவேதனை அடைந்தார். இதனால் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட மகள்கள் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர்.

தாயின் இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டனர். தாயின் பிணத்தை ஒரு அறையில் வைத்து விட்டு மறு அறையில் தங்கினர். கடந்த 9 நாட்களாக தாயின் பிணத்துடன் வசித்து வந்தனர். நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனை அருகில் உள்ளவர்கள் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என எண்ணிய மகள்கள் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தனர். தாய் இறந்தது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லலிதாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அந்த தொகுதியின் எம்.எல்.ஏ சம்பவ இடத்திற்கு வந்து லலிதாவின் மகள்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் லலிதாவின் இறுதி சடங்குக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News