விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை.. வெறுங்கையுடன் திரும்பிய மத்திய அமைச்சர்கள் - தொடரும் போராட்டம்!
- மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பிப்ரவரி 24 கூட்டத்தொடரில் எங்கள் கோரிக்கைகளை ஆதரிக்கும் தீர்மானத்தை நிரைவேற்ற வேண்டும்.
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு மற்றும் கனௌரி எல்லைகளில் விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் அவர்களை தலைநகர் டெல்லிக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப்-அரியானா எல்லையில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினர்.
சண்டிகர் மகாத்மா காந்தி பொது நிர்வாக கட்டடத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோர்கலந்து கொண்டனர்.
பஞ்சாப் அரசு சார்பில் மாநில அமைசர்கள் ஹர்பால் சிங் சீமா, குர்மீத் சிங் குத்தின் ஆகியோரும், போராடும் விவசாயிகள் சார்பில் ஜக்ஜித் சிங் தாலேவால், சர்வான் சிங் பாந்தர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
கடந்த 8 நாட்களில் நடக்கும் இரண்டாவது கூட்டம் இது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதோடு 6 பேச்சுவார்த்தைகள் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விவசாய துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், 'விவசாயிகளுடன் ஒரு சிறப்பான பேச்சுவார்த்தை நடந்தது. அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மார்ச் 19ஆம் தேதி சண்டிகரில் நடைபெறும்' என கூறினார்.
இதுதொடர்பாக பேசிய விவசாய தலைவர் சர்வான் பாந்தர் "நாங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வ உத்தரவாதமாகக் கோரினோம். அதற்கான செலவு குறித்த தரவுகளையும் வழங்கினோம். அதன் நன்மைகளை விளக்கினோம். அடைக்கப்பட்ட சாலைகளை மீண்டும் திறக்கவும் கேட்டோம்.
பிப்ரவரி 24 அன்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் எங்கள் கோரிக்கைகளை ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு பஞ்சாப் அரசை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய விவசாய கொள்கைகளை நிராகரிக்க வேண்டும் என்றும் பஞ்சாப் அரசை நாங்கள் கேட்டுக் கொண்டோம்" என்று கூறினார்.
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், மின்சாரக் கட்டண உயர்வு கூடாது, போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெறுதல், 2021 லக்கிம்பூர் கேரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை விவசாய சங்க பிரதிநிதிகள் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.