VIDEO: திருமணத்தில் வெடித்த துப்பாக்கி.. சரிந்து விழுந்து உயிரிழந்த நபர் - நீடிக்கும் மர்மம்
- பக்கத்து கிராமத்தை சேர்ந்த நபர் கொண்டாட்டங்களுக்காகக் கொண்டு வந்த துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தினார்.
- துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் இறந்தாரா அல்லது துப்பாக்கி சுடப்பட்ட சத்தத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது.
பஞ்சாபில் திருமணத்தில் துப்பாக்கி வெடித்து கொண்டாடும்போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள கோரயா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதான பரம்ஜித் சிங். இவரது மனைவி அவ்வூரின் கிராம சபை தலைவர்(சர்பாஞ்ச்) ஆவார். கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி நடந்த திருமண நிகழ்வில் பரம்ஜித் சிங் கலந்துகொண்டு மற்றவர்களுடன் நடனமாடி கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்து கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபர் கொண்டாட்டங்களுக்காகக் கொண்டு வந்த துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தி வானத்தை நோக்கி சுடமுயன்றனார்.
அதில் ஒரு குண்டு அருகில் நடனமாடி கொண்டிருந்த பரம்ஜித் சிங் மீது பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் பரம்ஜித் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மாரடைப்பு காரணமாக கீழே விழுந்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் தங்களிடம் கூறியதாக அவரது பரம்ஜித் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் சம்பவம் தொடர்பான வீடியோ நேற்று மாலை வெளியாகி சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில் துப்பாக்கிச்சூடு நடப்பதும் உடனே பரம்ஜித் கீழே சரிந்து விழுவதும் பதிவாகி உள்ளது. எனவே துப்பாக்கியால் சுட்டவரை கைது செய்ய வேண்டும் என்று கிராமத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் இறந்தாரா அல்லது துப்பாக்கி சுடப்பட்ட சத்தத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்பது குறித்த மர்மம் நீடித்து வருகிறது.