இந்தியா

USAID: அமெரிக்காவின் ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் - ஜெய்சங்கர்

Published On 2025-02-23 06:48 IST   |   Update On 2025-02-23 06:48:00 IST
  • 21 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.
  • யாரையோ தேர்தலில் வெற்றி பெற வைக்க முந்தைய பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.

இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க USAID அமைப்பு மூலம் 2012 முதல் வழங்கி வருவதாக கூறப்படும் 21 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது என்றும் யாரையோ தேர்தலில் வெற்றி பெற வைக்க முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, காங்கிரசை விமர்சித்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்காவிடம் நிதி பெறும் எந்த ஒப்பந்தமும் போடவில்லை என 2010-12 தேர்தல் ஆணையராக இருந்த குரேஷி மறுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழக SRCC இலக்கிய நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசிய அவர்,

"டிரம்ப் நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்ட சில தகவல்கள் கவலைக்குரியது. ஒரு அரசாங்கமாக, நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம். உண்மைகள் வெளிவரும் என்று நான் கருதுகிறேன்.

USAID இங்கு நல்லெண்ணத்துடன், நல்லெண்ண நடவடிக்கைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இப்போது, அமெரிக்காவிலிருந்து தீய நோக்கத்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.இது நிச்சயம் கவலையளிக்கிறது. அதில் ஏதாவது இருந்தால், அதில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பதை நாடு சில தகவல்கள் அறிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News