பெரும்பான்மை இல்லாதபோது மசோதாவை எப்படி நிறைவேற்ற முடியும்?: தி.மு.க. எம்.பி. பாலு
- ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களில் உள்ள 4,120 சட்டசபை தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு திட்டமிட் டுள்ளது.
இதையடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி அமைத்தது. இந்தக் குழு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையை மத்திய மந்திரிசபை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
நடப்பு பாராளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால், இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசமைப்பு சட்ட (129-வது திருத்தம்) மசோதா 2024-வை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் 12 மணிக்கு மேல் தாக்கல் செய்தார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை ஒரே நேரத்தில் நிறைவு செய்வது தொடா்பாக அரசமைப்பு சட்டப் பிரிவு 82ஏ-ல் புதிதாக துணைப் பிரிவு (2)-ஐ சோ்க்கவும், மக்களவை, சட்டப் பேரவைகளை கலைப்பது தொடா்பாக சட்டப் பிரிவு 83(2)-ல் புதிதாக துணைப் பிரிவுகள் (3), (4)-ஐ சோ்க்கவும், ஒரே நேரத்தில் இரு தோ்தல்களையும் நடத்துவது தொடா்பாக சட்டப்பிரிவு 327-ல் திருத்தம் மேற்கொள்ளவும் இந்த முதல் மசோதா வழிவகை செய்கிறது.
இரண்டாவது மசோதாவைப் பொறுத்தவரை, ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு ஏதுவாக புதுச்சேரி, டெல்லி, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களுடன் தொடர்புடைய 3 சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடா்பானதாகும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்த பிறகு, இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆரம்பத்திலேயே தங்களது எதிர்ப்பை தெரிவித்து கருத்துக்களை கூறினார்கள்.
இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அறிமுகத்துக்கு தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசியதாவது:
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தி.மு.க. எதிர்க்கிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு தேவையான பெரும்பான்மை அரசுக்கு இல்லாதபோது எதற்கு இதை அனுமதிக்கிறீர்கள்?
பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு இந்த மசோதாவை அனுப்பவேண்டும். ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என தெரிவித்தார்.
ஆனால் பா.ஜ.க. கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.