பள்ளி பருவத்தில் ஓடிப்போன காதல் ஜோடி.. 64 வருடங்களுக்கு பிறகு பேரன், பேத்திகள் முன்னிலையில் திருமணம்
- தம்பதிக்கு மெஹந்தி வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
- திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ஷ். அதே ஊரை சேர்ந்தவர் மிருதுளா. இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக பழகி வந்தனர். பள்ளியிலும் ஒன்றாக படித்து வந்தனர்.
அப்போது அவர்களிடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
கடந்த 1961-ம் ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த காலம். காதல் திருமணம் என்பது அரிதானது.
இதனால் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
இதனால் ஹர்ஷ் மற்றும் மிருதுளா பள்ளி பருவத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி எளிமையான முறையில் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அப்போது அவர்கள் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை என சபதம் ஏற்றனர்.
இந்த நிலையில் தம்பதிக்கு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைத்து ஆளாக்கினர்.
அவர்களுக்கும் குழந்தை பிறந்து மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளு பேர குழந்தைகள் என பெரிய குடும்பமாக வளர்ச்சி பெற்றது.
பேரன், பேத்திகளுடன் வாழ்ந்தாலும் தங்களுடைய திருமணம் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நடைபெறவில்லை. பிரமாண்ட முறையில் விருந்து வைக்கவில்லை என வயதான பிறகும் தம்பதி ஏக்கத்துடன் இருந்தனர்.
64 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மகன்கள் தங்களது பெற்றோர் எளிமையான முறையில் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்கு பிரமாண்ட முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் பெரிய திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமண ஏற்பாடுகள் நடந்தன.
இன்னிசை கச்சேரி ஆட்டம், பாட்டம் என திருமண மண்டபம் களை கட்டியது. தம்பதிக்கு மெஹந்தி வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
மகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேர குழந்தைகள் முன்னிலையில் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமண விழாவில் போட்டோ ஷூட் நடந்தது. மண மேடையில் மாலையும் கழுத்துமாக நின்ற தாத்தா, பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.
மேலும் செல்பி எடுத்துக் கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இந்த திருமண வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் இந்த தலைமுறைக்கு நீங்கள் முன்மாதிரி என பதிவு செய்து வருகின்றனர்.