பார்முலா-இ ரேஸ் வழக்கு: ரேவந்த் ரெட்டி முன்வந்தால் நான் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்- கே.டி, ராம ராவ்
- பார்முலா-இ கார் பந்தய வழக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை.
- எந்தவொரு கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க தயார். ஏனென்றால் ரேவந்த் ரெட்டியை போன்று நான் தவறு ஏதும் செய்யவில்லை.
பார்முலா-இ கார் பந்தயம் தொடர்பான பண பரிமாற்றத்தில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரானார். இன்று காலை 10.40 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகம் சென்ற கே.டி. ராமராவிடம் அதிகாரிகள் சுமார் ஏழு மணி நேரம் கேள்விகள் கேட்டனர்.
விசாரணை முடிந்த நிலையில் கே.டி. ராமராவ் கூறியதாவது:-
நான் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்குகிறேன். நீங்கள் எப்போது தயாராக இருக்கிறீர்களோ, அப்போது தேதியையும், இடத்தையும் தேர்வு செய்யுங்கள். நீங்கள் விரும்பும் இடத்திற்கு நான் வருகிறேன். இருவரும் சேர்ந்து இருப்போம். நான் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார். நீங்களும் உண்மை கண்டறியும் சோதனைக்கு போக வேண்டும்.
நீதிபதி முன் அமர்வோம். ஏசிபி நீதிபதி அல்லது உயர்நீதிமன்றம் நீதிபதி, ஏன் ஓய்வு பெற்ற நீதிபதியாக கூட இருக்கலாம். தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்ப வேண்டும். ஒட்டுமொத்த தெலுங்கானாவும் பார்க்க வேண்டும். அதன்பின் யார் உண்மை சொல்கிறார்கள். பொய் சொல்கிறார்கன் என்பதை மக்கள் முடிவு செய்து கொள்வார்கள்.
ரேவந்த் ரெட்டி ஏசிபி மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர். இதனால் நானும் கைது செய்யப்பட வேண்டும் என விரும்புகிறார். பார்முலா-இ கார் பந்தய வழக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. பண மோசடியும் நடைபெறவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் ரேவந்த் ரெட்டியுடன் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்கார தயாராக இருக்கிறேன். எந்தவொரு கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க தயார். ஏனென்றால் ரேவந்த் ரெட்டியை போன்று நான் தவறு ஏதும் செய்யவில்லை.
இவ்வாறு கே.டி. ராமராவ் தெரிவித்துள்ளார்.