இந்தியா
null

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் குகேஷ் - ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2024-12-12 14:16 GMT   |   Update On 2024-12-12 15:51 GMT
  • 18 வயதிலேயே சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் ஆனந்த கண்ணீர் சிந்தியுள்ளார்.
  • இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.

13 சுற்றுகள் முடிவில் குகேசும், லிரெனும் தலா 2 சுற்றுகளில் வெற்றி பெற்று இருந்தார்கள். மற்ற அனைத்து சுற்றுகளும் டிராவில் முடிந்தன. இதனால், இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.

இந்நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் 14-வது மற்றும் கடைசி சுற்று போட்டி இன்று நடந்தது. இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் சீன வீரரை வீழ்த்தி 7.5 புள்ளிகள் பெற்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயதிலேயே சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் ஆனந்த கண்ணீர் சிந்தியுள்ளார்.

இந்நிலையில், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு அவரது எக்ஸ் பதிவில், "உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இளம் வீரர் குகேஷுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். சபாஷ் குகேஷ். ஒவ்வொரு இந்தியர் சார்பாகவும், நீங்கள் எதிர்காலத்தில் புகழ் பெற வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி அவரது எக்ஸ் பதிவில், "மிக சிறப்பான சாதனை படைத்த குகேஷ்-க்கு வாழ்த்துகள். இந்த வெற்றி அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றின் விளைவால் கிடைத்துள்ளது. அவரது வெற்றி, சதுரங்க வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான இளம் வீரர்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News