இந்தியா

ஒரே நாடு, ஒரே தேர்தல்: மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கிய பரிந்துரைகள் என்னென்ன?

Published On 2024-12-12 13:55 GMT   |   Update On 2024-12-12 13:55 GMT
  • முதல் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதிகளை சீரமைப்பது.
  • தொங்கு பாராளுமன்றம் அல்லது நம்பிக்கையில்லாத தீர்மானம் வெற்றி பெற்றால் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள பரிந்துரைகள் எவைகள்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்விவரம் வருமாறு:-

1. தொடர்ந்து தேர்தல் நடைபெற்று வருவது நாட்டின் பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகிவற்றை பாதிக்கும். இந்த சுமையை குறைக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரை.

2. முதல் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதிகளை சீரமைப்பது அடங்கும். இதையடுத்து நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் 100 நாட்களுக்குள் நடத்தப்படும்.

3. ஒரு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து லோக்சபா கூடும் தேதியை நியமிக்கப்பட்ட தேதி என்று அறிவித்து தொடர்ச்சியான செயல்களை உறுதி செய்யும் அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடலாம்.

4. புதிதாக அமைக்கப்படும் மாநில சட்டசபைகளின் கால அவகாசம், அடுத்த பொதுத் தேர்தலுடன் (மக்களவை தேர்தல்) இணைந்ததாக இருக்கும்.

5. இந்தச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதை மேற்பார்வையிடவும் உறுதிப்படுத்தவும் ஒரு குழுவை அமைப்பதற்கு பரிந்துரை.

6. பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக 324A பிரிவை அறிமுகப்படுத்துவது மற்றும் அனைத்து தேர்தல்களுக்கும் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் மற்றும் புகைப்பட அடையாள அட்டையை உருவாக்க 325 வது பிரிவில் திருத்தம் செய்ய பரிந்துரைக்கிறது.

7. தொங்கு பாராளுமன்றம் அல்லது நம்பிக்கையில்லாத தீர்மானம் வெற்றி பெற்றால் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படும். ஆனால், புதிதாக அமையும் அரசு அடுத்த பொதுத் தேர்தலுக்கான காலவரை மட்டுமே (அதாவது ஐந்து வருடத்தில் இரண்டரை ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டால், புதிதாக தேர்தல் நடத்தப்பட்டு அமைக்கப்படும் அரசு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்யும்) செயல்படுவதாக இருக்கும்.

8. முதல் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இரண்டாவது கட்டமாக மாநில மற்றும் மக்களவைத் தேர்தல்கள் முடிந்து 100 நாட்களுக்குள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்படும்.

9. ஒருவேளை முன்னதாகவே கலைக்கப்படாவிடில், மாநில சட்டமன்றங்கள் மக்களவை காலம் முடியும் வரை தொடரும்.

10. திறமையான தேர்தல் நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக தேர்தலை நடத்த போதுமான எந்திரங்களை கொள்முதல் முன்கூட்டியே கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

11. அனைத்து தேர்தல்களுக்கும் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் மற்றும் அடையாள அட்டை முறையை குழு முன்மொழிகிறது, இதற்கு மாநிலங்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு அரசியலமைப்பு திருத்தம் தேவை.

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான கமிட்டி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நாடு தழுவிய ஆலோசனைகள் பெற்று 11 பரிந்துரைகளை உருவாக்கியது. இந்த பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது.

தற்போது மத்திய கேபினட் இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Tags:    

Similar News