சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு பிப்ரவரியில் 3.61% ஆக குறைவு
- சில்லறை பணவீக்க விகிதமானது ஜனவரி மாதம் 4.31 சதவீதமாக இருந்தது.
- இது பிப்ரவரி மாதத்தில் 3.61%-ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிந்து பிப்ரவரியில் 3.61%-ஆக குறைந்துள்ளது என மத்திய அரசின் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.
சில்லறை பணவீக்கம் என்பது நுகர்வோர் வாங்கும் சில்லறைப் பொருட்களின் விலைகள் காலப்போக்கில் உயரும் விகிதம் ஆகும்.
நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்க விகிதமானது ஜனவரி மாதம் 4.31 சதவீதமாக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் 3.61%-ஆக குறைந்துள்ளது.
கடந்தாண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு சில்லறை பணவீக்கம் 4%-க்கும் கீழ் சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
இதேபோல், உணவு பொருட்களின் சில்லரை பணவீக்கம் 3.75 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் உணவு பொருட்களின் சில்லரை பணவீக்கம் 5.97 சதவீதமாக இருந்தது.
கிராமப்புறங்களில் 4.06 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 3.20 சதவீதமாகவும் சில்லரை பணவீக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை வளர்ச்சி கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் 3.2சதவீதமாக இருந்தது. இந்தாண்டு ஜனவரி மாதம் அது 5 சதவீதமாக உயர்ந்தள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.