மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
- நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
- நிதியமைச்சர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் தர்மமாக வழங்கியது போல் காட்டினார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது அப்போது தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, திமுக எம்.பி.க்களின் கடும் கண்டனத்தை அடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் உரையாற்றிய தர்மேந்திர பிரதான், "யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழ்நாட்டின் கல்வித்தரம் கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு பின்தங்கியுள்ளது. 3 ஆம் வகுப்பு மாணவர்களால் 1 ஆம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை.
திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்பபெறக் சொல்கிறீர்கள். ஆனால், தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது என்றும் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் (பெரியார்) படத்திற்கு மாலை போடுகிறீர்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி கூறியதாவது:-
பாஜக அரசு, தினமும் தமிழ்நாட்டையும், எதிர்க்கட்சியினையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் இழிவு செய்கிறது. இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் இழிவுப்படுத்தப்பட்டார். நேற்று தமிழ்நாடு எம்.பி.க்கள் இழிவுப்படுத்தப்பட்டனர்.
நிதியமைச்சரும் அனைத்து அமைச்சர்களும் ஒரு நிகழ்ச்சி நிரலைப் பெற்று, தமிழக அரசை அவமதிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நேற்று, நிதியமைச்சர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் தர்மமாக வழங்கியது போல் காட்டினார்.
இவ்வாறு அவர் கூறினார்.