மியான்மர் - தாய்லாந்தில் ஐடி வேலை.. மோசடியில் சிக்கிய 549 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசு எச்சரிக்கை
- தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் கிரைம் மையங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
- தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் எச்சரிக்கையாக இருங்கள்.
மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்பவர்களால் மின்சாரம் பாய்ச்சியும், பணயக்கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வரிசையில், மியான்மர் - தாய்லாந்து எல்லை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கால் சென்டரில் சைபர் குற்றங்களில் ஈடுபட பணியில் அமர்த்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டு நேற்று முன் தினம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 266 இந்தியர்கள் இன்று (புதன்கிழமை) இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் கிரைம் மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 266 இந்தியர்களை நேற்று இந்திய விமானப்படை (IAF) விமானம் மூலம் பாதுகாப்பாக அழைத்து வர இந்திய அரசு ஏற்பாடு செய்தது. முன்னதாக திங்களன்று, 283 இந்தியர்களும் இதேபோல் திருப்பி அனுப்பப்பட்டனர்" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.
மேலும் இந்த விவகாரத்தில் இந்திய தூதரகங்கள் மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இதன்படி இதுவரை 549 இந்தியர்கள் மீட்டு தாயகம் அழைத்துவரப் பட்டுள்ளனர்.
மேலும் தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் வந்தால் அது தொடர்பாக முழுமையாக விசாரித்துவிட்டு செல்ல வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.