இந்தியா

'ரீல்ஸ்' வீடியோ எடுக்க பயன்படுத்திய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது

Published On 2025-03-12 14:51 IST   |   Update On 2025-03-12 14:51:00 IST
  • இருவரும் ஒன்றாக ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
  • ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக தனது வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்.

திருவனந்தபுரம்:

'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பவர்களில் ஏராளமானோர் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதன் மூலம் பலர் பிரபலமாகி விடுகிறார்கள்.

அப்படி பிரபலமான ஒரு வாலிபர், தன்னுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது. அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஹபீஸ் சஜீவ். இவர் இன்ஸ்டாகிராமில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் கேரளாவில் பிரபலமான நபராக அவர் மாறினார். இந்தநிலையில் அவருக்கு ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.

அந்த பெண் ஹபீஸ் சஜீவுடன் நட்பாக பழகினார். இதனைத்தொடர்ந்து இருவரும் ஒன்றாக ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதன் காரணமாக அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. ஹபீஸ் சஜீவ் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக தனது வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்.

அங்கு வைத்து தான் 'ரீல்ஸ்' வீடியோ எடுப்பாராம், அந்த வீட்டுக்கு இளம்பெண்னை வரவழைத்த ஹபீஸ் சஜீவ் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்துள்ளார். அந்த வீட்டில் வைத்து இளம்பெண்ணை ஹபீஸ் சஜீவ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

திருமணம் செய்வதாக கூறி அவர் பல முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஹபீஸ் சஜீவ் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், திருமணம் செய்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹபீஸ் சஜீவ் மீது ஆலப்புழா தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பின்பு ஹபீஸ் சஜீவை கைது செய்தனர். அவர் மீது பி.என்.எஸ். சட்டப்பிரிவு 69 (துணிச்சலான வழிகளை பயன்படுத்தி உடலுறவு கொள்ளுதல்), 74 (பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் பெண்ணை தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தை பயன்படுத்துதல் )ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ரீல்ஸ் வீடியோ எடுக்க பயன்படுத்திய பெண்ணை வாலிபர் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஆலப்புழாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News