மொழி அடிப்படையில் பிளவு முயற்சிகளை தவிர்க்க வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
- பொருத்தமான பதிலடியை கொடுத்ததாக அவர் கூறினார்.
- அனைத்து மொழிகளையும் வளப்படுத்துவது நம் சமூகப் பொறுப்பு.
இந்திய மொழிகளுக்கு இடையில் எப்போதும் பகைமை இருந்தது இல்லை. ஒவ்வொன்றும் மற்றொன்றை வளப்படுத்தியுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழாவில் பேசிய மோடி இவ்வாறு தெரிவித்தார்.
மொழிகளை அடிப்படையாகக் கொண்டு பிளவுகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, இந்தியாவின் மொழியியல் பாரம்பரியம் பொருத்தமான பதிலடியை கொடுத்ததாக அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்திய மொழிகளுக்கு இடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை. மொழிகள் எப்போதும் ஒன்றை ஒன்று வளப்படுத்தியுள்ளன. இந்த தவறான கருத்துக்களில் இருந்து நம்மை தூர விலக்கி, அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவது நம் சமூகப் பொறுப்பு."
"இந்தியா உலகின் மிகப்பெரிய மொழியியல் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது என்பது இதற்கு சான்றாகும். இந்த மொழியியல் பன்முகத்தன்மை நமது ஒற்றுமையின் மிகவும் அடிப்படையான ஒன்றாகும்," என்று மோடி கூறினார்.
இந்த விழாவில் என்.சி.பி.-எஸ்.பி. தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், 98வது அகில பாரதிய மராத்தி சம்மேளனத்தின் தலைவரான எழுத்தாளர் தாரா பவால்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.