இந்தியா

டெல்லியை கலக்கி வந்த பெண் தாதா கைது- ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

Published On 2025-02-22 08:18 IST   |   Update On 2025-02-22 08:18:00 IST
  • கணவரின் கீழ் செயல்பட்டு வந்த ஒட்டுமொத்த ரவுடி கும்பலையும் சோயா கானே தலைமையேற்று நடத்தி, பெண் தாதாவாக வலம் வந்தார்.
  • சோயாகான் சினிமா பிரபலம் போல் மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

புதுடெல்லி:

டெல்லியின் சிறப்புப் பிரிவு போலீசார் வடகிழக்கு டெல்லியில் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் பிரபல தாதா ஹாசிம் பாபாவின் மனைவி சோயா கானை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 270 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கைபற்றப்பட்டது.

போலீசார் விசாரணையில் சோயா கான் பற்றி பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது. அது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

டெல்லியை கலக்கி வந்தவர் பிரபல தாதாவான ஹாசிம் பாபா, இவருடைய 3-வது மனைவி சோயா கான். இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2017-ம் ஆண்டு ஹாசிம் பாபாவை திருமணம் செய்து கொண்டார்.

கொலை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஆயுத கடத்தல் வழக்குகள் தொடர்பாக ஹாசிம் பாபா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து கணவரின் இடத்துக்கு சோயா கான் வந்தார். கணவரின் கீழ் செயல்பட்டு வந்த ஒட்டுமொத்த ரவுடி கும்பலையும் சோயா கானே தலைமையேற்று நடத்தி, பெண் தாதாவாக வலம் வந்தார்.

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட போதிலும் எதிலும் தனது பெயர் வராமல் பார்த்து கொண்டதால், போலீசார் இவரை நெருங்க முடியாமல் இருந்தது.

இதுவரை அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டுக்கும், ஆதாரம் போலீசாருக்கு கிடைக்கவில்லை. அதனால் பல ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் அவர் டிமிக்கி கொடுத்து வந்தார். தற்போது ஆதாரத்துடன் போலீஸ் பிடியில் வசமாக சிக்கியுள்ளார். சோயா கான் தலைமையிலான கும்பல், போதைப்பொருள் கடத்தலை முக்கிய தொழிலாக செய்து வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சோயாகான் சினிமா பிரபலம் போல் மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். தனது கணவர் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி திகார் சிறைக்கு அவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு தொழில் ரகசியங்களை சமிக்ஞைகள் வாயிலாக அவர் தனது கணவருக்கு பகிர்ந்து வந்துள்ளார்.

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, சோயா கானின் தாயார் கடந்த 2024-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது தந்தை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News