மகாகும்பத்தில் புனித நீராடி வழிபட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
- மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
- பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ்நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதால் நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று திரி வேணி சங்க மத்தில் புனித நீராடி வருகின்றனர்.
வாழ்வில் மிகவும் அரிய நிகழ்வு என்பதால் பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கும்பமேளாவில் இன்று புனித நீராடி வழிபட்டார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான இந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய தீர்த்தமான திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும் வேண்டி வழிபட்டேன்.
இங்கு காற்றில் பரவியுள்ள தீவிரமான நேர்மறை சக்தி அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது.
சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கெனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சியடைந்த ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.