தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து- 30 பேர் சிக்கியுள்ளதாக தகவல்
- இரண்டு மீட்புக் குழுக்கள் நிலைமையை ஆராய்வதற்கு சுரங்கப் பாதைக்குள் சென்றுள்ளனர்.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு.
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அம்ராபாத்தில் சுரங்கப்பாதை ஒன்று இடிந்து விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில், பணியில் இருந்த தொழிலாளர்கள் 30 பேர் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.
நாகர்கர்னூல் மாவட்ட கலெக்டர், தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விபத்து குறித்து நாகர்கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வைபவ் கைக்வாட் கூறியதாவது:-
ஸ்ரீசைலம் நீர்தேக்கத்துக்கு அருகில் உள்ள சுரங்கப் பாதையில் இன்று வழக்கமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, அதன் ஒரு பகுதி கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
நீர் பாசனத் திட்டத்தை மேற்கொண்ட நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு மீட்புக் குழுக்கள் நிலைமையை ஆராய்வதற்கு சுரங்கப் பாதைக்குள் சென்றுள்ளனர். எங்களிடம் தெளிவான தகவல்கள் இல்லை. மீட்புக்குழு வந்த பின்பு நிலைமை குறித்து தெரியவரும்.
இவ்வாறு கூறினார்.