உடைந்த சீட் ஒதுக்கிய விவகாரம்: மத்திய மந்திரியிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா
- உடைந்த சீட்களில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை.
- இது பயணிகளை ஏமாற்றும் வேலை இல்லையா என கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி:
மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேற்று போபாலில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட 8 சி சீட் சேதமடைந்து இருந்தது.
இதுதொடர்பாக, சிவராஜ் சிங் சவுகான் எக்ஸ் வலைதளத்தில், போபால்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த சீட் கொடுக்கப்பட்டதாக பதிவிட்டார்.
அதில், நான் போபாலில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்ய இருந்தேன். ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் பதிவுசெய்திருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட 8 சி இருக்கை சேதமடைந்து இருந்தது. சக பயணிகள் இருக்கையை மாற்றி அமரும்படி வற்புறுத்தினார்கள், ஆனால் வேறு எந்த நபருக்கும் தொந்தரவு கொடுக்க கூடாது என்பதால் சேதமடைந்த இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்தேன்.
டாடா நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அபப்டி எதுவும் நடக்கவில்லை. பயணிகளிடமிருந்து முழுத் தொகையையும் வசூலித்த பிறகு, மோசமான மற்றும் வலிமிகுந்த இருக்கைகளில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை. இது பயணிகளை ஏமாற்றும் வேலை இல்லையா?
ஏர் இந்தியா நிர்வாகம் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகானிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நிகழாமல் தடுக்க இந்த விஷயத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.