இந்தியா
சர்வதேச மத சுதந்திரம்: அமெரிக்க அமைப்பின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா

சர்வதேச மத சுதந்திரம்: அமெரிக்க அமைப்பின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா

Published On 2025-03-27 01:19 IST   |   Update On 2025-03-27 01:19:00 IST
  • இது மீண்டும் ஒரு சார்புடைய மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கை.
  • இந்தியாவின் நிலையை குறை கூறும் அமெரிக்க அமைப்பின் முயற்சிகள் வெற்றி பெறாது என்றார்.

புதுடெல்லி:

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்) என்பது 1998-ம் ஆண்டு சர்வதேச மத சுதந்திர சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பின் ஆணையர்கள் அதிபராலும் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் இரு அரசியல் கட்சிகளின் தலைமையாலும் நியமிக்கப்படுகின்றனர்.

சர்வதேச அளவில் மத சுதந்திர மீறல்கள் குறித்து இந்த அமைப்பு ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடும். ஒவ்வொரு ஆண்டும், இந்த அமைப்பு இந்தியாவில் நடக்கும் சம்பவங்களைப் பட்டியலிட்டு, இந்தியாவில் மத சுதந்திரம் பற்றி விமர்சனங்களை முன் வைக்கும். அதேபோல இந்தாண்டும் குறை கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தலின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக பா.ஜ.க. வெறுப்பு பிரசாரம் செய்தது என்றும், சீக்கிய பயங்கரவாதி பன்னூனை கொலை செய்ய சதி செய்த இந்திய உளவு அமைப்பை தடைசெய்ய வேண்டும் என பரிந்துரை செய்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அறிக்கையை நிராகரித்த மத்திய அரசு, அமெரிக்க அமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2025-ம் ஆண்டு அறிக்கையை நாங்கள் பார்த்தோம். இது மீண்டும் ஒரு சார்புடைய மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கை.

இந்தியாவின் துடிப்பான பன்முக கலாசார சமூகத்தின்மீது அவதூறுகளை சுமத்தும் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்.பின் தொடர்ச்சியான முயற்சிகள் கண்டிக்கப்பட வேண்டியவை.

அந்த அறிக்கையில் மத சுதந்திரத்திற்கான உண்மையான அக்கறையை விட , திட்டமிட்ட உள்நோக்கமே அதில் வெளிப்படையாக தெரிகிறது.

ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மையின் கலங்கரை விளக்கமாக இருக்கும் இந்தியாவின் நிலையை குறைகூறும் இத்தகைய முயற்சிகள் வெற்றிபெறாது. உண்மையில் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப். அமைப்பு தான் சர்ச்சைக்குரிய அமைப்பாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News