சினிமா போல் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் 100 முறை பயங்கர துப்பாக்கி சூடு: பா.ஜ.க. பிரமுகர் ஆத்திரம்
- அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டு பாய வில்லை.
- சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக அரசியல் பிரமுகர்கள் விமர்சனம்.
உத்தரகாண்ட் மாநிலம் கான்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியன்.
இந்த தொகுதியில் தற்போது சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கிய உமேஷ் குமார் என்பவர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் அரசியல் மோதல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.
2 பேரும் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, உமேஷ் குமார் எம்.எல். ஏ.வை ஒரு முறைகேடான குழந்தை என்று குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் விமர்சனம் செய்தார்.
இதனை கேட்டு உமேஷ் குமார் எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் வீட்டின் முன்பாக சென்று கோஷம் எழுப்பினர். அப்போது தைரியம் இருந்தால் நேருக்கு நேர் வா என சவால் விடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் அவருடைய ஆதரவாளருடன் கையில் துப்பாக்கி ஏந்தியபடி உமேஷ் குமார் எம்.எல்.ஏ.வின் அலுவலக த்திற்குச் சென்றார்.
அங்கிருந்த ரமேஷ் குமார் எம்.எல்.ஏ.வின் ஆதரவா ளர்களை அவர்கள் தாக்கினர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் எம்.எல்.ஏ அலுவலகத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
சரவெடி போல தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கிகளில் இருந்து 100 குண்டுகள் பாய்ந்தன. அதில் 70 குண்டுகள் எம்.எல்.ஏ அலுவலகத்தில் உள்ள சுவர்களை துளைத்ததாக கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டு பாய வில்லை. இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் கையில் துப்பாக்கியுடன் எம்.எல்.ஏ. அலுவலகத்தை தனது ஆட்களுடன் வலம் வந்து அங்கிருந்து நெஞ்சை நிமிர்த்தியபடி நடந்து சென்றார்.
சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இந்த காட்சிகள் ஒரு சில நிமிடங்களில் அரங்கேறியது. இது பற்றி தகவலறிந்த போலீசார் மற்றும் உமேஷ் குமார் எம்.எல்.ஏ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தனது அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை கண்டு உமேஷ் குமார் எம்.எல்.ஏ ஆவேசமடைந்தார். அவரும் ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் வீட்டை நோக்கி நடந்து சென்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து பா.ஜ.க. முன்னாள் எம்எல்ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் உள்பட 4 பேரை டேராடோனில் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக குன்வர்பிரணவ் சிங் சாம்பியன் கூறுகையில்:-
தன்னுடைய வீட்டின் முன்பு வந்து உமேஷ் குமார் எம்.எல்.ஏ. தனக்கு சவால் விட்டதால் நான் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என தெரிவித்து ள்ளார்.
உத்தரகாண்டில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக அரசியல் பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர்.