பட்டாசு விற்பனைக்கு நிரந்தர தடை.. எந்த மதமும் மாசுபாட்டை ஊக்குவிப்பதில்லை- உச்ச நீதிமன்றம்
- தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்ததே காற்று மாசுவுக்கு காரணம்.
- நவம்பர் 25-ம் தேதிக்குள் டெல்லிக்குள் பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்
இந்தாண்டு அக்டோபர் 31 அன்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்பட்டதால் பெரும்பாலான நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.
தீபாவளி அன்று தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்ததே காற்று மாசுவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆதலால் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த தவறிய மாநில அரசு மற்றும் காவல்துறை இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது.
இந்நிலையில், பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டெல்லி போலீஸ் சார்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லியில் பட்டாசு வெடிப்பதையும் விற்பனை செய்வதையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை டெல்லி போலீஸ் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், "எந்த மதமும் மாசுபடுத்தும் எந்த செயலையும் ஊக்குவிப்பதில்லை. பேஷனுக்காக பட்டாசு வெடிப்பதாக கூறினால்.. அது பொதுமக்களின் அடிப்படை உரிமையான ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஆகவே நவம்பர் 25-ம் தேதிக்குள் டெல்லிக்குள் பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை விதிக்கும் முடிவை மாநில அரசு எடுக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.