ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு: ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
- ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு குழுவினரிடம் ஒருமித்த கருத்து நிலவியதாக தகவல்.
- மக்களவை மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்திய 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த பரிந்துரை.
பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழுவை நியமித்தது.
இந்தக் குழுவில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதி கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக உயர்மட்ட குழுவுக்கு பொதுமக்கள் இடம் இருந்து சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேறப்ட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டு இருந்தது. இது தொடர்பாக 191 நாட்களாக ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கை 18,626 பக்கங்கள் கொண்டது என தகவல் வெளியானது.
அந்த அறிக்கையில் ஒரே நேரத்தில் மக்களவை மற்றம் மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்த குழு ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியதாகவும், தேர்தல் நடத்தப்பட்ட 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே தேர்தல் தேர்தல் நடைமுறை மற்றும் நிர்வாகத்தை மாற்றும் எனவும் தெரிவித்துள்ளது.