இந்தியா

பங்குச் சந்தையில் தொடர் சரிவுக்கு பிறகே பிரதமர் மோடி, தெய்வ பிறவி இல்லை என்பதை உணர்ந்துள்ளார்: காங்கிரஸ் விமர்சனம்

Published On 2025-01-11 12:01 IST   |   Update On 2025-01-11 12:01:00 IST
  • இந்தியாவுக்கான அந்நிய முதலீடுகள் குறைந்து வருகின்றன.
  • இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைந்து வருவதும் அச்சுறுத்தலாக உள்ளது.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியை ஜெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் சந்தித்து பேட்டி எடுத்தார்.

பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி மனம் திறந்து பேசினார். நானும் மனிதன் தான், கடவுள் அல்ல என்று அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பிரதமரை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட தொடர் சரிவுக்கு பிறகே பிரதமர் தன்னை தெய்வப் பிறவி இல்லை என்பதை உணர்ந்துள்ளார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

தான் தெய்வப் பிறவி என்று கூறி வந்த பிரதமா் மோடி, பங்குச் சந்தையில் இருந்து கடந்த 6 நாட்களில் ரூ.1.72 லட்சம் கோடி வெளியேறிய பிறகே, 'தாம் ஒரு மனிதன் தான்' என்று மறுகண்டுபிடிப்பு செய்துள்ளாா்.

இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவா் மீதான முறைகேடு குற்றச்சாட்டு ஆகியவற்றால் இந்திய வா்த்தகம் மீது அந்நிய முதலீட்டாளா்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பங்குச் சந்தையில் முதலீடுகள் வெளியேறி உள்ளன.

வியட்நாம் , மலேசியாவை ஒப்பிடுகையில் இந்தியாவுக்கான நேரடி அல்லது மறைமுக அந்நிய முதலீடுகள் வெகுவாக குறைந்து வருகின்றன. டாலருக்கு எதிரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைந்து வருவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Tags:    

Similar News