சத்தீஸ்கர்: பத்திரிகையாளரின் குடும்பமே பட்டப்பகலில் கொலை.. கோடரியால் நடந்த பயங்கரம்
- கோடாரி மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி சந்தோஷின் குடும்பத்தைத் அவர்கள் தாக்கினர்.
- அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சத்தீஸ்கரில் இந்த வருட தொடக்கத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் சாலை கட்டுமான ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் ஒப்பந்ததாரரால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சத்தீஸ்கரின் சூரஜ்பூரை சேர்ந்த ஆஜ் தாக் பத்திரிகையாளர் சந்தோஷின் பெற்றோர் மற்றும் சகோதரர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சந்தோஷின் பெற்றோர்களான மகே டோப்போ (57) மற்றும் பசந்தி டோப்போ (55), அவரது சகோதரர் நரேஷ் டோப்போ (30) ஆகியோருடன் ஜகன்னாத்பூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய வந்தனர். இந்த நிலம் தொடர்பாக அவர்களது உறவினர்களுடன் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில், அவர்களது உறவினர்கள் ஆறு முதல் ஏழு பேர் வந்து, கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதத்தால் ஏற்பட்ட மோதல் விரைவில் வன்முறையாக மாறியது. கோடாரி மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி சந்தோஷின் குடும்பத்தைத் அவர்கள் தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாசந்தி மற்றும் நரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மாகே பலத்த காயமடைந்தார். அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சந்தோஷின் மற்றொரு சகோதரர், உமேஷ் டோப்போ, தப்பித்து, அருகில் உள்ள கிராம மக்களிடம் உதவியை நாடியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் முன்பு அந்த நிலத்தில் விவசாயம் செய்திருந்தனர்.
ஆனால் நீதிமன்ற தீர்ப்பு சந்தோஷின் குடும்பத்திற்கு உரிமை வழங்கியதால் பகை வளர்ந்துள்ளது. சம்பவம் நடந்த உடனேயே குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். வழக்குப்பதிவு செய்த போலீஸ் அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.