தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற பாஜக முயற்சி: ஆம் ஆத்மி எம்.பி. குற்றச்சாட்டு
- டெல்லியில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்களை சேர்க்க பா.ஜ.க. முயற்சி.
- தேர்தல் ஆணையத்தின் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு.
டெல்லியில் போலி வாக்காளர்களை சேர்க்க அதிக அளவில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் பாஜக தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர் ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்த குற்றம் சாட்டி வருகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் பாஜக மற்றும் அதன் தலைவர்கள் போலி வாக்காளர்கள் சேர்ப்பு மூலமாக தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சஞ்சய் சிங் கூறுகையில் "இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் யதார்த்தம். பிரதமர் மோடியின் கட்சி தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளது இப்படித்தான். பாஜக மற்றும் அதன் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சி செய்து வருகின்றனர். இது பாஜக-வின் தேர்தல் மோசடி. அவர்களுடைய மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் மூலம் இதை செய்கின்றனர். அவர்கள் தேர்தல் ஆணையத்தின் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும்.
அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் புது டெல்லி தொகுதியில் ஆயிரக்கணக்கான புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்காக போலியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. உ.பி., பீகாரில் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது.