பாரதிய ஜனதா மீதான நம்பிக்கை மக்களுக்கு அதிகரித்துள்ளது- பிரதமர் மோடி
- பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் இரட்டை என்ஜின் வேகத்தில் வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
- அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து வளர்ச்சியை கொண்டுவர வேண்டும் என்று பாரதிய ஜனதா செயல்படுகிறது.
திருவனந்தபுரம்:
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று கேரளா வந்தார்.
இன்று காலை கொச்சி துறைமுகத்தில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த கப்பல் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கட்டப்பட்டதாகும்.
நவீன வசதிகளுடன் கூடிய இக்கப்பல் கடற்படையில் இணைவதன் மூலம் இந்திய கடற்படையின் வலிமை மேலும் அதிகரிக்கும்.
முன்னதாக பிரதமர் மோடி கேரளாவில் ஆதிசங்கரர் பிறந்த காலடியில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் அங்கு பூஜைகளும் நிறைவேற்றினார்.
இதனை தொடர்ந்து கொச்சி மெட்ரோ ரெயில் திட்டம் உள்ளிட்ட ரூ.4500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசினார். அவர் பேசியதாவது:-
கேரளாவில் தற்போது வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கொச்சி மெட்ரோ ரெயில் விரிவாக்கம் மூலம் இன்போபார்க் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பயன் அளிக்கும்.
நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களை விமான நிலையங்கள் போல மேம்படுத்தும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக முக்கிய ரெயில் நிலையங்களை மறுசீரமைப்பது, அவற்றை மேம்படுத்துவது போன்ற பணிகளையும் செய்து வருகிறது. கேரளாவில் ரூ.1 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் பாரதிய ஜனதா தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, கேரள மக்களுக்கு பாரதிய ஜனதா மீது நாளுக்குநாள் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் இரட்டை என்ஜின் வேகத்தில் வளர்ச்சியை நோக்கி செல்கிறது. அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து வளர்ச்சியை கொண்டுவர வேண்டும் என்று பாரதிய ஜனதா செயல்படுகிறது. அதற்கான பணிகளை முழு வேகத்தில் செய்து வருகிறோம், என்றார்.
கேரளா வந்த பிரதமர் மோடியை கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். பிரதமரை காண கொச்சி சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரண்டிருந்தனர். இதுபோல பாரதிய ஜனதா கட்சியினரும் ஏராளமானோர் கூடியிருந்தனர். பிரதமர் மோடி வருகையை யொட்டி கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.