30 எம்.எல்.ஏ.-க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்த காங்கிரஸ் தலைவர்: பதிலடி கொடுத்த பஞ்சாப் ஆம் ஆத்மி
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
- காங்கிரஸ் தலைவர்கள், எம.எல்.ஏ-க்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறுவதாக பதிலடி.
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 22 இடங்களை பிடித்து தோல்வியைத் தழுவியது. கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சியின் 30 எம்.எல்.ஏ.-க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா தெரிவித்திருந்தார்.
இதற்கு பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரும், ஆம் ஆத்மி எம்.பி.யுமான மல்விந்தர் சிங் கங் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக மல்விந்தர் சிங் கங் கூறியதாவது:-
அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களும் உங்களுடன் தொடர்பில் உள்ளனரா?. அவர்கள் இருந்தால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அபோஹர் எம.எல்.ஏ. சந்தீப் ஜகார் எங்கே? ராஜ்குமார் சபேவால் (தற்போது ஆம் ஆத்மி கட்சியில் உள்ளார். கடந்த வருடம் காங்கிரஸ் கட்சியில் இருந்த வெளியேறினார்) கட்சியில் இருந்து ஏன் வெளியேறினார்?.
பிரதாப் சிங் பஜ்வாலின் சொந்த சகோதரர் பெடாஜங் பஜ்வா பாஜகவில் இணைந்தார். அதைக்கூட அவரால் தடுக்கமுடியவில்லை. இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர்கள், எம.எல்.ஏ-க்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் குறித்து பாஜ்வா கவலைப்படுவதாகத் தெரிகிறது.
இவ்வாறு மல்விந்தர் சிங் கங் தெரிவித்துள்ளார்.