கேள்விகள் உங்களுக்காக... பிரதமர் மோடியின் துன்புறுத்தல் கருத்துக்கு கார்கே பதில்
- சில சுயநல நபர்கள் அரசியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கடிதம்.
- மற்றவர்களை மிரட்டுவதும், கொடுமைப்படுத்துவதும் பழைய காங்கிரஸ் கலாசாரம்- பிரதமர் மோடி
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு நாடு முழுவதும் இருந்து 600 வக்கீல்கள் ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அதில் சில சுயநல நபர்கள் அரசியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும், எப்படி தீர்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் தலையிட முயற்சிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
வக்கீல்கள் கடிதம் தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார். அதில் "மற்றவர்களை மிரட்டுவதும், கொடுமைப்படுத்துவதும் பழைய காங்கிரஸ் கலாசாரம். 50 ஆண்டுகளுக்கு முன்பு, அர்ப்பணிப்பு உணர்வுள்ள நீதித்துறை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. ஆனால், தனது சுயநல ஆதாயங்களுக்காக மற்றவர்களிடம்தான் அர்ப்பணிப்பு உணர்வை வெட்கமின்றி எதிர்பார்க்கிறது. மற்றபடி நாடு மீதான அர்ப்பணிப்பு உணர்வில் இருந்து நழுவிக்கொள்கிறது. எனவே, 140 கோடி இந்தியர்களும் அக்கட்சியை நிராகரித்ததில் ஆச்சரியம் இல்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியை நோக்கி பல கேள்விகளை எழுப்பி பதில் கொடுத்துள்ளார்.
இந்திய நிறுவனங்களை உங்களுடைய தனிப்பட்ட சொத்தாக கருதும் உங்களை நோக்கி சில கேள்விகள் என பிரதமர் மோடியை நோக்கி மல்லிகார்ஜூன கார்கே எழுப்பிய கேள்விகள்:-
1. முதல் கேள்வி 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பொது வெளியில் பேட்டி அளித்தனர். அப்போது ஜனநாயக செயல்பட்டிற்கு சுந்திர நீதித்துறை முக்கியமானது எனத் தெரிவித்திருந்தனர்.
2. அதில் இடம் பிடித்திருந்த நீதிபதிகளில் ஒருவர் மாநிலங்களவைக்கு அரசால் நியமனம் செய்யப்பட்டது ஏன்?.
3. இதுவரை இல்லாத வகையில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 2020-ல் மாநிலங்களவை எம்.பி.யாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் நியமனம் செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக அதுபோன்ற என்ற நீதிபதி பெயரும் பரிந்துரை செய்யப்படவில்லை.
4. மக்களவை தேர்தலுக்காக மேற்கு வங்காளத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியை அபிஜீத் கங்கோபாத்யாய் உங்களுடைய கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது?.
5. உச்சநீதிமன்றம் ரத்து செய்த போதிலும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அரசால் ஏன் கொண்டுவரப்பட்டது? (காங்கிரஸ் பின்னர் அரசியலமைப்பு திருத்த மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் ஆதரவு அளித்தது).
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.