கூட்டுறவு வங்கியில் இருந்து 2 நாட்களில் நடிகை ரன்யாவுக்கு ரூ.10 லட்சம் பரிமாற்றம்
- நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் நகர தொழிலதிபரின் மகன் தருண் ராஜுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
- கார் டிரைவர் ரன்யா ராவை விமான நிலையத்தில் இருந்து 3 முறை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
பெங்களூரு:
பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு பல்வேறு தகவல்கள் கிடை த்தது. நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டார். இன்று அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது.
நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் நகர தொழிலதிபரின் மகன் தருண் ராஜுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ரன்யாவும், தருணும் பல வருட நண்பர்கள் ஆவார்கள். அவர் மூலம் துபாயில் இருந்து தங்கம் கடத்தி கொண்டு வந்ததாகவும், இருவரும் அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை டி.ஆர்.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
அதுபோல் ஒரு அரசியல் பிரமுகரின் கார் டிரைவரையும் கைது செய்துள்ளனர். இந்த கார் டிரைவர் ரன்யா ராவை விமான நிலையத்தில் இருந்து 3 முறை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28 ஆகிய 2 நாட்களில் மட்டும் கூட்டுறவு வங்கியிலிருந்து ரன்யாவின் கணக்கிற்கு ரூ.10 லட்சம் பணம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் வருவதற்கு முன்பு ரன்யாவின் கணக்கில் பணம் இல்லை. இந்த விவகாரம் குறித்தும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நடிகை ரன்யா ராவ் விவகாரம் கர்நாடக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. கர்நாடக சட்டமன்ற கூட்ட தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்கட்சியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்டமன்றத்தில் நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் தொடர்புடையதாக கூறப்படும் செல்வாக்குமிக்க 2 அமைச்சர்கள் யார்? என கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு உள்துறை மந்திரி பரமேஸ்வரா இந்த வழக்கு குறித்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. தங்கம் கடத்தல் வழக்கில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பதை சி.பி.ஐ. விசாரித்து கண்டுபிடிக்கும் என தெரிவித்தார்.