இந்தியா

புதிய மசோதாவில் வரி செலுத்துவோரின் இ-மெயில், சமூக வலைத்தள கணக்குகளை உளவு பார்க்க திட்டமா?

Published On 2025-03-11 07:33 IST   |   Update On 2025-03-11 07:33:00 IST
  • தற்போதைய டிஜிட்டல் உலகில், முக்கிய தகவல்கள் சர்வரில் சேமித்து வைக்கப்படுகின்றன.
  • வரி செலுத்தும் சாமானியர்களை குறிவைத்து இந்த அதிகாரம் கொண்டுவரப்படவில்லை.

புதுடெல்லி:

1961-ம் ஆண்டின் வருமானவரி சட்டத்துக்கு மாற்றாக, புதிய வருமானவரி மசோதா-2025 பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மசோதாவில், வரி செலுத்துவோரின் இ-மெயில், மற்றும் வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் மின்னணு ஆவணங்களின் கடவுச்சொற்களை பெறுவதற்கும், அவற்றை உளவு பார்ப்பதற்கும் வருமானவரி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

அதுகுறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

டிஜிட்டல் கணக்குகளில் இருந்து ஆதாரங்களை சேகரிப்பது வரிஏய்ப்பை நிரூபிப்பதற்கு மட்டுமின்றி, வரிஏய்ப்பு எவ்வளவு நடந்துள்ளது என்று மதிப்பிடுவதற்கும் அவசியம் ஆகும்.

தற்போதைய டிஜிட்டல் உலகில், முக்கிய தகவல்கள் சர்வரில் சேமித்து வைக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் உள்ள சேமிப்பு வசதிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. அவற்றை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது.

அதற்கான ரகசிய எண்ணை வருமானவரி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டவர் அளிப்பது இல்லை. வருமானவரி அதிகாரிகளுடன் ஒத்துழைப்பது இல்லை. இதனால் ஒட்டுமொத்த வருமானவரி சோதனையும் பலனின்றி போய் விடுகிறது. சம்பந்தப்பட்ட நபர் எளிதாக தப்பி விடுகிறார்.

எனவே, வருமானவரி சோதனையின்போது, டிஜிட்டல் வடிவத்தில் உள்ள கணக்குகளை ஆய்வு செய்வதற்காகத்தான் ரகசிய எண் கேட்டுப்பெற வருமானவரி அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய 1961-ம் ஆண்டு வருமானவரி சட்டத்தின் 132-வது பிரிவிலேயே இந்த அதிகாரம் ஏற்கனவே உள்ளது. அது, புதிய வருமானவரி மசோதாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வருமானவரி சோதனையின்போது மட்டுமே இந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும், சம்பந்தப்பட்ட நபர் எந்த தகவலையும் அளிக்க மறுத்தால் மட்டுமே அந்த அதிகாரம் பயன்படுத்தப்படும்.

மற்றபடி, வருமானவரி ஆய்வில் சிக்கி இருந்தால் கூட ஒருவரது ஆன்லைன் கணக்குகளை ஆய்வு செய்வது எங்கள் நோக்கம் அல்ல. சமூக வலைத்தள கணக்குகளை உளவு பார்க்க மாட்டோம். சமூக வலைத்தள கணக்குகள் மூலம் யாருக்கு எதிராகவும் பின்வாசல் வழியாக செயல்பட மாட்டோம்.

வரி செலுத்தும் சாமானியர்களை குறிவைத்து இந்த அதிகாரம் கொண்டுவரப்படவில்லை. ஆண்டுக்கு 8 கோடியே 79 லட்சம் வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அவற்றில் சுமார் 1 சதவீத கணக்குகள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

எனவே, உளவு பார்ப்பதற்காக வருமானவரி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை. அச்சத்தை உண்டாக்கும் நோக்கத்தில் பரப்பப்படும் வதந்திகள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News