
தெலுங்கானாவில் சென்னையில் இருந்து கடத்திய ரூ.2½ கோடி வெளிநாட்டு தங்கம் பறிமுதல்
- சென்னையில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர்.
- வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் தங்க கட்டிகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
திருப்பதி:
சென்னையில் இருந்து ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் காரில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அங்குள்ள வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து தனி பிரிவு அதிகாரிகள் சவுட்டுபல் பந்தாங்கி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அந்த காரில் 3 பேர் இருந்தனர். காரின் ஹேண்ட் பிரேக் அடியில் ஒரு சிறிய பெட்டி அமைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனை திறக்குமாறு கூறினர்.
அப்போது காரில் வந்தவர்கள் அது சாதாரணமானது தான் என கூறி திறக்க மறுத்தனர். அதிகாரிகளின் கடுமையான விசாரணைக்கு பிறகு கிளைட்ச் அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு சுவிட்ச் மூலம் ஹேன்ட் பிரேக் அடியில் இருந்த சிறிய பெட்டியை திறந்தனர்.
அதில் ரூ.2½ கோடி மதிப்பிலான 5 தங்க கட்டிகள் இருந்தன. இந்த தங்க கட்டிகள் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா வழியாக கர்நாடக மாநிலம் பிதார் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.
வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் தங்க கட்டிகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
சென்னையில் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.