டெல்லி முதல்வராக பதவி ஏற்றார் ரேகா குப்தா
- ரேகா குப்தா உடன் 6 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
- பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் யார் என அறிவிக்காமல், இன்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று டெல்லி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ரேகா குப்தா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். டெல்லி சட்டமன்ற பாஜக கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், துணைநிலை ஆளுநர் சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அதனடிப்படையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
ஆளுநர் சக்சேனா ரேகா குப்தாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனையடுத்து ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா, கபில் மிஷ்ரா, ரவீந்தர் இந்திரஜ் சிங், மன்ஜிந்தர் சிங் சிர்சா, பங்கஜ் குமார் சிங், ஆஷிஷ் சூட் உள்ளிட்டவர்கள் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்றதன் மூலம் டெல்லியின் 4-வது பெண் முதல்வரானார் ரேகா குப்தா.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ரேகா குப்தா ஷாலிமார் பார்க் தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி வேட்பாளரை சுமார் 29 ஆயிரம் வாக்குகள் விததியாசத்தில் தோற்கடித்திருந்தார்.