இந்தியா

121 பேரை பலிகொண்ட ஹத்ராஸ் கூட்டநெரிசல் - சாமியார் 'போலே பாபா' குற்றமற்றவர் - விசாரணை ஆணையம்

Published On 2025-02-21 12:51 IST   |   Update On 2025-02-21 12:51:00 IST
  • ராம் குதிர் ஆசிரமம் நடத்தி வரும் போலே பாபா என்ற இந்துமத சாமியாரின் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது.
  • காவல்துறையும் நிர்வாகமும் விழிப்புடன் இருந்திருந்தால் இந்த துயர விபத்தைத் தவிர்த்திருக்கலாம்.

ராம் குதிர் தொண்டு நிறுவனம் என்ற பெயர் ஆசிரமம் நடத்தி வரும் போலே பாபா என்ற பிரபல இந்துமத சாமியாரின் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் ஒன்று கடந்த ஜூலை 2, 2024 இல் உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்தது.

இதில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 121 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம்.

கூட்டநெரிசல் ஏற்பட்டபோது போலே பாபா அங்கிருந்து தனது காரில் தப்பினார். தனது காலடி மண்ணை எடுக்குமாறு போலே பாபா கூறியதும் மக்கள் தல்லுமுல்லுப்பட்டதால் தான் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக உயிர்பிழைத்தவர்கள் பலர் தெரிவித்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை விசாரிக்க சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

 

இந்நிலையில் அந்த ஆணையத்தின் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அவையில் தாக்கல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் இந்த சம்பவத்தில் போலே பாபாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உண்மையான காரணம், ஏற்பாட்டாளர்களின் தவறான நிர்வாகமும், அந்த இடத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகப்படியாகச் சேர்ந்த கூட்டமுமே ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறை தனது பொறுப்பை முறையாகச் செய்யவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தை நிர்வகிப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

காவல்துறையும் நிர்வாகமும் விழிப்புடன் இருந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், ஒருவேளை இந்த துயர விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கடுமையான விதிகளை அமல்படுத்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதற்கிடையில் இதே உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் மகா கும்பமேளா ஆன்மீக கூடுகையில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி ஏற்பட்ட கூட்டநெரிசலில் 30 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News