கர்நாடகாவில் மராத்தி மொழி தெரியாது எனக்கூறிய நடத்துநர் மீது தாக்குதல்
- அரசு பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் பேருந்து நடத்துநரிடம் மராத்தியில் பேசினார்.
- மராத்தியில் பேசிய பெண்ணிடம் கன்னடத்தில் பேசுங்கள் என்று நடத்துநர் கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேச தெரியாது எனக்கூறிய பேருந்து நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாதிக்கப்பட்ட நடத்துநர், அரசு பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் என்னிடம் மராத்தியில் பேசினார். அதற்கு தனக்கு மராத்தி தெரியாது, கன்னடத்தில் பேசுங்கள் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அந்தப் பெண் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி என்னைத் திட்டினார். அப்போது திடீரென்று ஏராளமான மக்கள் ஒன்றுகூடி என்னை தாக்கினர்" என்று தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் நடத்துநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவேண்டும் என்று கன்னட அமைப்பினர் வலியுறுத்தினர்.
பெலகாவி மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மராத்தி பேசக்கூடிய மக்கள் கணிசமானோர் வாழ்கின்றனர். இம்மாதிரியான சம்பவங்கள் அவ்வப்போது அங்கு எல்லைப் பிரச்சினையைத் தூண்டி விடுகின்றன. இந்த மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டுமென மராத்தி பேசக்கூடிய மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை கன்னட மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.