5 மாநிலங்களில் 7 இடங்களில் கள்ளநோட்டு அச்சடிக்கும் எந்திரங்கள் பறிமுதல்- 9 பேர் கைது
- 5 மாநிலங்களில் 11 இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறையினர் சோதனை நடத்தினர்.
- ஆந்திரா மற்றும் பீகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி:
ரூபாய் நோட்டில் பயன்படுத்தப்படும் ரிசர்வ் வங்கி முத்திரை மற்றும் சரிகைநூல் ஆகியவற்றுடன் கூடிய உயர் ரக காகிதத்துடன் 2 பேர் கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் இவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தால் உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர் மற்றும் பெங்களூரு நகரங்களில் சோதனை நடத்தப்பட்டபோது பிடிபட்டனர்.
இதைத்தொடர்ந்து அதற்கு அடுத்தநாள் மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மற்றும் அரியானாவின் பிவானியில் அச்சு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மராட்டியம், அரியானா, தெலுங்கானா, பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் 11 இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் 7 எந்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மும்பையின் விக்ரோலி பகுதியில் ரூ.50, ரூ.100 நோட்டுகளை அச்சடிக்கும் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சங்கமனர் மாவட்டம் மற்றும் கோலாப்பூர் மாவட்டத்தில் 2 பேரும், பெல்காமில் 3 பேரும் கைதானார்கள். இதுபோல ஆந்திரா மற்றும் பீகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது பாரதிய நியாய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.