கடவுளால்கூட பெங்களூருவை மாற்றமுடியாது: சிவகுமார் கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம்
- டி.கே.சிவகுமாரின் கருத்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
- சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு திறமையற்றது என்றது பாஜக.
பெங்களூரு:
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரங்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது.
இதற்கிடையே, பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார், பெங்களூருவை 2 அல்லது 3 ஆண்டுகளில் மாற்ற முடியாது.கடவுளால் கூட அதைச் செய்யமுடியாது. சரியான திட்டமிடல் மூலம் செயல்கள் நடைபெற்றால் மட்டுமே பிரச்சனைகளை சரிசெய்ய முடியும் என தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் துணை முதல் மந்திரி சிவகுமாரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சித்த ராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு திறமையற்றது.
துணை முதல் மந்திரி சிவகுமார் போலல்லாமல் பொது வாழ்வில் உள்ள தலைவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
அவர் தனது தனிப்பட்ட லட்சியங்களுக்கு நிதியளிப்பதற்காக பெங்களூரை பணப் பசுவாக மட்டுமே கருதுகிறார்.
பெங்களூருவின் குடிமைப் பிரச்சனைகளைச் சரிசெய்யும் பொறுப்பை டி.கே.சிவகுமார் ஏற்கவில்லை என்றால் அவர் பதவி விலக வேண்டும். திறமையான ஒருவருக்கு அவர் வழிவிட வேண்டும் என தெரிவித்தது.