இந்தியாவின் மிகப்பெரிய கூகுள் அலுவலகம்.. பெங்களூருவில் திறப்பு - என்னென்ன சிறப்பு?
- 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் வகையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
- "பெங்களூரில் உள்ள புதிய அனந்தா வளாகம் எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்"
உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களுக்கு இந்தியா முக்கியமான சந்தையாக உள்ளது. அந்த வகையில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவை மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர்.
இதனால் கூகிள் நிறுவனம் இந்தியாவில் பெரும் தொகையை முதலீடு செய்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 19 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனது புதிய மற்றும் மிகப்பெரிய இந்திய அலுவலகத்தை கூகிள் நிறுவனம் திறந்து வைத்தது.
பெங்களூரின் மகாதேவபுரா பகுதியில் அனந்தா என்ற பெயரில் இந்த புதிய கூகுள் அலுவலகம் அமைத்துள்ளது. 10 லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் வகையில் இந்த அலுவலகம் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
கூகிளின் ஆண்ட்ராய்டு, தேடல், பணம் செலுத்துதல், கிளவுட், மேப்ஸ், ப்ளே மற்றும் டீப் மைண்ட் உள்ளிட்ட பல்வேறு குழுக்களாக பணி புரியும் ஊழியர்களுக்காக தனித்தனி பிரிவுகள் இந்த புதிய அலுவலகத்திலிருந்து வேலை செய்ய உள்ளது.
இந்த அலுவலகத்தில் 'சபா' என்று அழைக்கப்படும் மைய இடம் உள்ளது. இது கூட்டங்கள் மற்றும் பட்டறைகளுக்குப் பயன்படுத்தப்படும். பார்வை குறைபாடுள்ளவர்கள் எளிதாக நடக்க சிறப்பு தொட்டுணரக்கூடிய தரை அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவும் வகையில் நடைபயிற்சி மற்றும் ஜாகிங் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அலுவலகம் குறித்து பேசியுள்ள கூகிள் இந்தியாவின் துணைத் தலைவரும் நாட்டு மேலாளருமான பிரீத்தி லோபனா, "பெங்களூரில் உள்ள புதிய அனந்தா வளாகம் எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்" என்று தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் தனது ஸ்மார்ட் போன்களின் உற்பத்தியைத் தொடங்கியது. மும்பை, ஐதராபாத், புனே, குர்கான் ஆகிய நகரங்களிலும் கூகுள் அலுவலகம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.